கடலூர்: சிதம்பரம் சிவசக்திநகரை சேர்ந்தவர் பழனிசாமி(47). பைனான்சியர். இவருடைய அண்ணன் மகளை, நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த டிரைவரான சண்முகபிரகாஷ்(33) என்பவர் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக சண்முகபிரகாசுடன் அவருடைய மனைவி வாழவில்லை. இதற்கு பழனிசாமி தான் காரணம் என்று அவர் மீது சண்முகபிரகாஷ் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 16.10.2017 அன்று அண்ணாமலைநகர் கூத்தங்கோவில் செல்லும் வழியில் உள்ள பெரிய மதகு அருகில் பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கூலிப்படையுடன் வந்த சண்முகபிரகாஷ், பழனிசாமியை வெட்டி கொலை செய்தார்.
இது பற்றி அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சண்முகபிரகாஷ், கூலிப்படையை சேர்ந்த சீர்காழி ஹர்ஷத் அலி, ஆச்சாள்புரம் மாரியப்பன், மனோஜ் ஆகியோரை அதிரடியாக கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சண்முகபிரகாஷ் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் சண்முகபிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதையடுத்து சண்முகபிரகாஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் மத்திய சிறையில் உள்ள அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.