காவல் பயிற்சிப் பிரிவு :
காவல்துறை அமைப்பில் பயிற்சி என்பது முக்கிய அம்சமாகும். எனவே காவல் பயிற்சி பிரிவு காவல்துறை இயக்குநர் ஒருவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவருக்கு உதவியாக காவல்துறை கூடுதல் இயக்குநர் இருவரும், காவல்துறை தலைவர் இருவரும், காவல்துறை துணைத் தலைவர் ஒருவரும், காவல் கண்காணிப்பாளர் மூவரும், இதர பயிற்சித் திட்ட அலுவலர்களும் உதவிகரமாகச் செயல்பட்டு, பல்வேறு வகையான பயிற்சிகளைத் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.
காவல் பயிற்சிக் கல்லூரி பயிற்சியாளர்களுக்குச் சிறப்புப் பாடல் திட்டங்களுக்கான வகுப்புகளையும், பயிலரங்குகளையும், பயிற்சிகளையும் நடத்துவதோடு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கென பல்வேறு கருத்தரங்குகளையும் நடத்துகிறது. பயிற்சிப் பிரிவில் வேலூர், கோயம்புத்தூர் மற்றும் பேரூரணி ஆகிய இடங்களில் காவல் பயிற்சி பள்ளிகளும் உள்ளன. காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அப்பதவிக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அடிப்படைப் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. கோயம்புத்தூரிலும், தூத்துக்குடியிலும் தற்காலிக காவல் பயிற்சிப் பள்ளிகளும், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, காஞ்சிபுரம், வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை, இரமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய இடங்களில் சரக தலைநகரங்களிலும் பணியிடைப் பயிற்சி மையங்களும் உள்ளன.
2007-ஆம் ஆண்டில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளுடன் இந்திய காவல் பணி அலுவலர்களுக்கான தகுதி காண் பருவத்தின் போது புத்தாக்கப் பயிற்சியும், ஆய்வாளர்களுக்கும், உதவி ஆய்வாளர்களுக்கும் ஆயத்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இது தவிர, போக்குவரத்தைத் திட்டமிட்டு நிர்வகித்தல், நடைமுறைப்படுத்துதல், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், பெண்களுக்கு எதிராக ,ழைக்கப்படும் குற்றங்கள், கடன் அட்டை மோசடி போன்றவற்றில் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 55 பாடங்கள் அடங்கிய குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அறிவுசார் சொத்துரிமை, மனிதவள மேம்பாடு, காவல்துறையின் மதிப்பினை உயர்த்துதல் போன்ற சிறப்புப் பாடங்களில் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிலகங்கள் நடத்தப்பட்டன.