கடலூர்: புவனகிரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் மணிக்கண்ணன் (45). இவர் நேற்று கடலூரில் இருந்து புவனகிரி நோக்கி காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார். அந்த கார், கடலூர்-சிதம்பரம் சாலையில் கடலூர் முதுநகர் அடுத்த பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, காரின் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென சாலையின் நடுவில் வந்தார். இதை எதிர்பாராத மணிக்கண்ணன், அவர் மீது மோதாமல் இருப்பதற்காக தனது காரை சாலையின் வலதுபுறம் திருப்பினார்.
அப்போது காரைக்காட்டில் இருந்து கடலூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. மேலும் அந்த கார், சாலையோரத்தில் நின்றவர்கள் மீதும், அருகில் இருந்த குளிர்பான கடையின் சுவரிலும் மோதி நின்றது.
இதில் குளிர்பான கடையின் முன்பு நின்று கொண்டிருந்த காரைக்காடு அருகே உள்ள பெரியபிள்ளையார்மேடு வேலு நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமு(40) என்பவர் கார் மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த ரவீந்திரன்(50), காரைக்காட்டை சேர்ந்த ஆதிலட்சுமி(35), மோட்டார் சைக்கிளில் வந்த காரைக்காட்டை சேர்ந்த மகேந்திரன்(40), இவரது மனைவி ஆனந்தி(32) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மகேந்திரன், ஆனந்தி, ரவீந்திரன் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ராமு நேற்று காலையில் தனது குழந்தைகளை பள்ளிக்கு பஸ்சில் அனுப்பி வைப்பதற்காக பஸ் நிறுத்தத்துக்கு வந்து, குழந்தைகளை பஸ்சில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவர், அங்கு சாலையோரமாக கட்டிட வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கார் மோதியதில் இறந்தார் என்பது தெரியவந்தது.
விபத்தில் இறந்த ராமுவுக்கு இளவரசி என்ற மனைவியும், புஷ்பராஜ் என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் உள்ளனர். கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் புஷ்பராஜ் 4-ம் வகுப்பும், மதுமிதா 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.