காரைக்குடி: காரைக்குடியில் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டின் கதவை உடைத்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி மல்லிகா(52). இவர் பீர்கலைகாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் இவர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பீரோவில் 14 பவுன் நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து மல்லிகா சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் காரைக்குடியை சேர்ந்த அம்மாவும், மகனுமான குமரன் மனைவி சாந்தி(45) மற்றும் நாகராஜ்(19) ஆகியோரை கிரைம் டீம் சார்பு ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் சிறப்பு எஸ்ஐ சேவியர், கண்ணதாசன், சாமிநாதன், சுரேஷ், முத்தரசன், தரன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்டனர்.