சென்னை : சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் குடித்துவிட்டு தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வசந்தா (48), மதுரவாயல் காவல் துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், யாரோ கழுத்தை கயிற்றால், இறுக்கி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மதுரவாயல், உதவி ஆணையர் திரு. ரமேஷ்பாபு, ஆய்வாளர் திரு. சிவானந்த், உதவி ஆய்வாளர் திரு .சுதாகர், ஆகியோர் தலைமையில் , ராஜேந்திரனின் மனைவி மற்றும் மருமகனிடம், விசாரணை நடத்தினர்.
ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, கயிற்றால் கழுத்தை வசந்தாவும், பிரதாப்பும் சேர்ந்து இறுக்கி, கொலை செய்துள்ளனர். ஆட்கள் யாரும் வராத வகையில், ராஜேஸ்வரி காவல் காத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கணவனை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி வசந்தா, மகள் ராஜேஸ்வரி, மருமகன் பிரதாப் ஆகியோரை கைது செய்தனர்.