கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தான்.
கடந்த 23–ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய நித்தீஷ், வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் நித்தீஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை பார்த்தனர். அப்போது மாணவன் நித்தீசை மர்மநபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன், ஆய்வாளர்கள் திரு.ராஜாராம், திரு.ரமேஷ்பாபு, திரு.சுதாகர், உதவி-ஆய்வாளர் திரு.நடராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் நித்தீசின் பெற்றோர், உறவினர்கள், சித்தேரி கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். சிறுவனை 2 பேர் சேர்ந்துகொன்று இருக்கலாம் என்றும், கொலையாளிகள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். அதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து 4 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் திணறுகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேற்று முன்தினம் மதியம் சித்தேரி கிராமத்திற்கு வந்தார். நித்தீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்த கழிவறை மற்றும் அதைச்சுற்றியுள்ள முட்புதர் பகுதியை பார்வையிட்டார். பின்னர் நித்தீசின் தந்தை முருகேசன், தாய் சங்கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். நித்தீசின் சகோதரிகள் பரமேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரிடம் நித்தீஷ் பள்ளி முடிந்துவந்தவுடன் எங்குசெல்வான், யாருடன் விளையாடுவான், அவன் யாருடன் நெருங்கி பழகுவான் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதிலளித்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சிறுவன் கொலை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா என்று கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சிறுவன் நித்தீஷ் கொலையில் குற்றவாளிகள் இன்னும் கைது சௌ;யப்படாததால் சித்தேரி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் தங்களது குழந்தைகளை வெளியே விளையாடவிட பெற்றோர் அச்சமடைகின்றனர். இரவு நேரத்திலும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே செல்ல பெற்றோர் அனுமதிப்பதில்லை. இது சித்தேரி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே கொலை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.