கடலூர்: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கடலூர் உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று காலை 8 மணி முதல் இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. இதற்கு ‘சாகர் கவாச்’ எனப்படும் கடல் கவசம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்பேரில் காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைச்சாவடிகளில் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். தங்கும் விடுதி, முக்கிய வழிபாட்டு தலங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உதவி- ஆய்வாளர் திரு.சிவகுருநாதன், சிறப்பு உதவி- ஆய்வாளர் திரு.பாஸ்கரன், ஏட்டுகள் திரு.மில்டன், திரு.மோகன் மற்றும் காவல்துறையினர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் நவீன வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கடல் வழியாக படகில் இருந்து 2 பேர் கடற்கரையோரம் தீவிரவாதிகள் போல் சந்தேகமான முறையில் வந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தீவிரவாதிகள் போல் வந்த கமாண்டோ படை வீரர்கள் என்று தெரிய வந்தது.
அதன்பிறகு கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் துறைமுகம் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நவீன படகு மூலம் சென்று வேறு யாராவது ஊடுருவுகிறார்களா? என்பதை கண்காணித்தனர். அந்த நேரத்தில் படகில் 6 பேர் வந்தனர். அவர்களை கடலோர காவல்குழுமத்தினர் பிடித்து விசாரித்த போது, அவர்களும் கமாண்டோ படை வீரர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் பிடித்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கரைக்கு வந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில், துறைமுகம், பரங்கிப்பேட்டை அனல் மின்நிலையம் ஆகியவற்றை வெடி குண்டு வைத்து தகர்க்கும் சதி திட்டத்தில் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் காவல்படையினர் பிடித்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் அதிகாரிகள் உத்தரவின்பேரில் 8 பேரையும் கடலோர பாதுகாப்பு குழுமயினர் விடுவித்தனர். இதன் மூலம் தீவிரவாதிகள் போல் ஊடுருவி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை கடலோர காவல்படையினர் முறியடித்து உள்ளனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று(வியாழக்கிழமை) முடிவடைகிறது.