கடலூர்: கடலூர் அருகே சிப்காட் பகுதியில் உள்ள வயல்வெளியில் இரைதேடி வரும் கொக்கு மற்றும் நாரைகளை சிலர் வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து பறவைகளை வேட்டையாடும் நபர்களை கையும், களவுமாக பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் கடலூர் வனச்சரக அலுவலர் அப்துல்ஹமீது தலைமையில் வனக்காவலர்களை கொண்ட குழுவினர் சிப்காட் பகுதியில் உள்ள வயல் மற்றும் நீர்நிலைப்பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது வயல்வெளிப் பகுதியில் 2 மர்ம நபர்கள் வலைவிரித்து கொக்குகளை பிடித்துக்கொண்டிருந்தனர். உடனே வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் வனத்துறையினரை கண்ட 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த 15 கொக்குகள் மற்றும் 10 நாரைகள், பறவைகளை பிடிப்பதற்கான வலை ஆகியவற்றை கைப்பற்றி கடலூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அவற்றை மாவட்ட வன அலுவலர் சவுந்தரராஜன் பார்வையிட்டார். தப்பி ஓடிய 2 பேரையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து கொக்கு மற்றும் நாரைகளை பாதுகாப்பாக கொண்டு சென்று நீர்நிலைகளில் வனத்துறையினர் பறக்கவிட்டனர். மேலும் இதுபோன்று யாரேனும் பறவைகளை வேட்டையாடுவது பற்றி அறிந்தால் உடனே கடலூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று வனத்துறை அலுவலர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.