கடலூர்: காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பையனூர் பெரியார்தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் அசோக்(30). டிரைவர். இவர் சொந்தமாக சொகுசு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 4–ந்தேதி இரவு வண்டலூரில் உள்ள ஒரு கார் நிறுத்தத்தில் அசோக் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது இரவு 11.30 மணி அளவில் அங்கு வந்த 6 பேர், அசோக்கிடம் வேளாங்கண்ணிக்கு செல்ல வேண்டும் என்றனர். அதற்கு அசோக் சம்மதித்ததும், அந்த 6 பேரும் காரில் ஏறினர். கார் வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்டது.
கடலூர் அருகே ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகில் மறுநாள் காலை 4 மணி அளவில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றார். இதையடுத்து அசோக் காரை சாலையோரம் நிறுத்தினார். உடனடியாக அவர்கள் 6 பேரும் அசோக்கை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி, அவரை சாலையோரமாக வீசி விட்டு காரை கடத்தி சென்று விட்டனர்.
இதில் படுகாயமடைந்த அசோக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது பற்றி அசோக் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடினர்.
இந்த நிலையில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு.புகழேந்தி, டெல்டா பிரிவு உதவி-ஆய்வாளர் திரு.நடராஜன் மற்றும் காவல்துறையினர் வல்லம்படுகை சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கொள்ளிடத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தினர். பின்னர் அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், முன்னுக்கு பின் முரணான தகலை தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த சந்திரமோகன் மகன் சரத்பாபுகுமார் என்கிற சரத் (28), மேலசண்முகபுரம் கோபால் மகன் பிரபு (37) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் மற்றும் 4 பேர் சேர்ந்து அசோக்கை தாக்கி அவருடைய காரை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சரத்பாபுகுமார், பிரபு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கார் டிரைவர் அசோக்கை சென்னையில் ஒரு ஜவுளிக்கடைக்கு வெளியில் சரத்பாபுகுமார் உள்பட 6 பேரும் சந்தித்து சவாரி குறித்து பேசியுள்ளனர். அப்போது அவருடைய செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டனர். பின்னர் அவர்கள் செல்போனில் பேசி அசோக் இருக்கும் வண்டலூர் கார் நிறுத்தத்துக்கு சென்றனர்.
அவரிடம் வேளாங்கண்ணிக்கு சென்று மொட்டை போட்டு விட்டு உடனடியாக வந்து விடலாம். ஒரு கிலோ மீட்டருக்கு 13 ரூபாய் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்ததும் அசோக் அவர்கள் 6 பேரையும் ஏற்றி வந்துள்ளார். அவர்கள் ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் வந்ததும் அவரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு காரை கடத்தி சென்று விட்டனர். அந்த 6 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல்துறையினர் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த 3–ந் தேதி இரவில் பதிவானதை சோதனை செய்தோம். அப்போது அசோக் ஓட்டி வந்த காரில் பயணம் செய்த 6 பேர் பற்றி அடையாளம் தெரிந்தது. அதை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று (நேற்று) தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக அதே காரில் சரத்பாபுகுமார், பிரபு ஆகிய 2 பேரும் வந்த போது, பிடிபட்டனர்.
இதில் சரத்பாபுகுமார் மீது 5 கொலை வழக்குகளும், பிரபு மீது 10 வழிப்பறி வழக்குகளும் உள்ளன. தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் பிடிபடுவார்கள்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கூறினார்.
பேட்டியின் போது சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷா, கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர். தூத்துக்குடியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்வதற்காகவும், வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட பயன்படுத்துவதற்காகவும் அந்த காரை அவர்கள் கடத்தியதாக போலீசார் தெரிவித்தார்.