சென்னை: சென்னை அம்பத்தூரைச்சேர்ந்த ஆதிமூலம் என்பவருடைய மகன் சக்தி என்ற சக்திவேல் (35). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி குணசுதா. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் குணசுதா தலைப்பிரசவத்துக்காக சீர்காழியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்து 6 மாதங்களாகிறது. இந்த நிலையில் மனைவியையும், குழந்தையையும் சென்னைக்கு அழைத்து செல்வதற்காக சக்திவேல் காரில் சீர்காழிக்கு சென்றார். அங்கு அவர் தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டு, காரில் தனது மாமனார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர் கபிலன் ஆகியோருடன் சென்னைக்கு திரும்பிச்சென்று கொண்டு இருந்தார். காரை சக்திவேல் ஓட்டினார்.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கரிக்கல்நகரில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த அரசு பஸ் வேகமாக கார் மீது மோதியது. இதில் கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள காளியம்மன்கோவில் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் சக்திவேல், அவரது மாமனார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கபிலன் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் கடலூர்–ரெட்டிச்சாவடி இடையே சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைப்பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்த மனைவியை, கைக்குழந்தையுடன் அழைத்து வருவதற்காக சென்ற தனியார் நிறுவன ஊழியர், மாமனாருடன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது