கடலூர்: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய 66 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை வெள்ளத்தால் 110 பேர் உயிரிழந்தனர். கால்நடைகளும் பலியாகின. ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தனர்.
அதேபோல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரியாக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, ஊர்க்காவல் படை போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் தமிழகத்தை புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால், கடலோர மாவட்டமான கடலூரில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் நேற்று கடலூர் வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் ஐ.ஜி.க்கள் பெரியய்யா, செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அனிஷா உசேன், காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி காவல் ஐ.ஜி.க்கள் பெரியய்யா, செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து காவலர் நல திருமண மண்டபத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காவல் ஐ.ஜி.க்கள் பெரியய்யா, செந்தாமரைக்கண்ணன், மாவட்ட கலெக்டர் ராஜேஷ், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அனிஷா உசேன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊர்க்காவல்படை ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து 300 தன்னார்வலர்கள், காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள், முதலுதவி போன்ற பல்வேறு பயிற்சிகளை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் அளித்தனர். அப்போது வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாற்றத்தை இளைஞர்களால் மட்டுமே தர முடியும் என்று ஐ.ஜி.பெரியய்யா கூறினார்.