கடலூர்: சிதம்பரம் குற்றப்பிரிவு காவல் உதவி-ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு உதவி-ஆய்வாளர்கள் தனசேகரன், காளிமுத்து ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் ஓமகுளம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், காவல்துறையினரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை மேட்டுத் தெருவை சேர்ந்த அப்துல்ஜபார் மகன் அபுசையத்(32) என்பதும், அவர் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய பகுதியில் உள்ள கடை வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 15 மொபட்டுகளை திருடி, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அபுசையத்தை காவல்துறையினர் கைது செய்து, வீட்டில் மறைத்து வைத்திருந்த மொபட்டுகளை மீட்டனர்.