கடலூர்: புவனகிரி காவல் உதவி- ஆய்வாளர்கள் திரு.தேவநாதன், திரு.ஞானசேகரன் மற்றும் காவலர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோர் புவனகிரி பஸ் நிலையம் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புவனகிரி சின்னப்பமுதலியார் தெருவை சேர்ந்த சுரேந்தர் (33) என்பவர் தனது தந்தை ராமானுஜத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேந்தர் மது குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையறிந்த சுரேந்தர், ராமானுஜத்துடன் சேர்ந்து கொண்டு காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் காவலர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தியை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதையடுத்து புவனகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற ராமானுஜத்தை தேடி வருகின்றனர். இதனிடைய இதில் படுகாயம் அடைந்த காவலர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.