கடலூர்: கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பொருளாதார குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார்.
பேரணியில் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபாகரன், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன், காவல் ஆய்வாளர் திரு.மனோகரன், சிறப்பு உதவி-ஆய்வாளர்கள், ஏட்டுகள், கடலூர் செம்மண்டலம் கந்தசாமிநாயுடு பெண்கள் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி பாரதிசாலை, மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம், அரசு மருத்துவமனை சாலை வழியாக சென்று செம்மண்டலம் கல்லூரியை சென்றடைந்தது.
முன்னதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள், பொதுமக்களை ஏமாற்றி செல்போன் மற்றும் வங்கியின் கடவுச்சொல்லை பெற்று, ஏமாற்றுவது தொடர்பான விவரங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்து நிதி நிறுவனங்களும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாக பெற முடியாது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை தொலைத்து விடாதீர் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொருளாதார குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் வினியோகம் செய்தனர். தொடர்ந்து கல்லூரியில் பொருளாதார குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு குறும்படமும் திரையிட்டு மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.