கடலூர்: குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் காலை 8.05 மணிக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று ஆயுதப்படை போலீசார், தீயணைப்புத் துறை, ஊர்க்காவல்படை, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., இளம்செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருடன் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உடனிருந்தார்.
தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 39 காவலர்களுக்கு முதல்- அமைச்சரின் காவலர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார். இதையடுத்து விழா மேடையின் வலது புறத்தில் அமர்ந்து இருந்த தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை, பொது சுகாதாரம் – நோய் தடுப்பு மருந்து துறை, வேளாண்மை துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 52 பேருக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் படை வீரர் நலத்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் 35 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 74 ஆயிரத்து 826 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., மடவாப்பள்ளம் ஈஷா யோகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலெக்டரின் மனைவி அம்ருதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி டாக்டர் கீதாவாணி, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சப்-கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தாசில்தார் பாலமுருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை தாசில்தார் ஜான்சிராணி தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
முன்னதாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது. அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வந்து நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.