கடலூர்: சுதந்திர தின விழா நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் ராஜேஷ் காலை 8.30 மணிக்கு அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வந்தார். அவரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வேதரத்தினம் வரவேற்று கொடிமேடைக்கு அழைத்துச்சென்றார். கலெக்டருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமாரும் உடன் வந்தார்.
அங்கு காலை 8.35 மணிக்கு கலெக்டர் ராஜேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட கலெக்டரை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் திறந்த ஜீப்பில் அழைத்துச்சென்றார். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள், இளஞ்செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் சாரணர் படையினர் மைதானத்தில் வரிசையாக அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு சுதந்திரபோராட்ட தியாகிகளை கலெக்டர் ராஜேஷ் கவுரவித்தார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.72 ஆயிரம் மதிப்பில் நிதி உதவிக்கான காசோலை, வருவாய்த்துறை சார்பில் 20 பேருக்கு ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்து 20 மதிப்பிலான வீட்டு மனைப்பட்டாக்கள், வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு ரூ.7 ஆயிரத்து 501 மதிப்பிலான இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 14 பேருக்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.9 ஆயிரத்து 120 மதிப்பிலான சலவைப்பெட்டிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 பேருக்கு ரூ.50 ஆயிரத்து 915 மதிப்பிலான நவீன செயற்கை கால் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் என மொத்தம் 52 பேருக்கு ரூ.12 லட்சத்து ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, மகளிர் திட்டம், வேளாண் பொறியியல் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜேஷ் நினைவு பரிசு வழங்கினார்.
இதன்பிறகு மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடலூர் ஓயாசிஸ் சிறப்பு பள்ளி மாணவர்கள் ஜெய்ஹோ என்ற பாடலுக்கு ஆடினர். இவர்களின் நடனத்தை பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள். தொடர்ந்து கடலூர் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜெய், ஜெய் நந்தினி என்ற பாடலுக்கும், கருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை பாரதம் படைப்போம் என்ற பாடலுக்கும், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்தியா என் இந்தியா என்ற பாடலுக்கும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வந்தே மாதரம் என்ற பாடலுக்கும், கடலூர் புனித மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில கலாசார பாடலுக்கு குழுவாகவும் நடனம் ஆடினர்.
கடலூர் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் இசை நடனம், புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எனது இந்தியா தேச பக்தி பாடலுக்கு குழுவாக நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இருப்பினும் சிறப்பாக நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்த புனித மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசும், திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2–வது பரிசும், பண்ருட்டி ஜான்டூயி மேல்நிலைப்பள்ளிக்கு 3–வது பரிசும் வழங்கப்பட்டது. கடலூர் ஓயாசிஸ் சிறப்பு பள்ளிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கடலூர் சப்–கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், சென்னை ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் திரு.ஜார்ஜி ஜார்ஜ், மாவட்ட கலெக்டரின் மனைவி அனிதா ராஜேஷ், காவல் கண்காணிப்பாளரின் மனைவி கீதாவாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராமு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதிவாணன், இணை இயக்குனர் மருத்துவப்பணிகள் மாதவி, துணை இயக்குனர் ஜவகர்லால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.