கடலூர்: தீவிரவாதிகளால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை போக்கவும், தீவிரவாதிகள் தாக்கினால் அதை எதிர்கொள்ளவும் காவல்துறையினருக்கு உரிய பயிற்சி கொடுக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு ‘சாகர் காவச்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘சாகர் காவச்’ என்பதற்கு தமிழில் ‘கடல் கவசம்’ என்று பெயர். அதன்படி நேற்று (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் மேற்பார்வையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடலோர காவல்படை ஆய்வாளர் திரு.சேகர் தலைமையில் உதவி- அய்வாளர்கள் திரு.சிவகுருநாதன், திரு.பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் நவீன ரோந்து படகில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு படகை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் வந்த 6 பேர் தீவிரவாதிகள் போல் மாறுவேடமிட்ட காவல்துறையினர் என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவல் பிரிவை சேர்ந்த திருமால் (28) சதாமுசேன் (23) தணிகைவேல் (23) சதிஷ் (25) இந்திய கடலோர காவல்படையை சேர்ந்த சாஷி (27) இந்திய கடற்படையை சேர்ந்த ஹக்மாராம் (21) ஆகியோர் என்பதும், கடலூர் பூச்சிமேட்டில் உள்ள ஒரு தேவாலயத்திலும், கடலூர் துறைமுகம் அருகே உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திலும், தேவனாம்பட்டினம் கடற்கரையிலும் போலி வெடிகுண்டுகளை வைப்பதற்காக வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள், 5 பாக்ஸ் மாதிரி வெடிகுண்டுகளும், 2 வட்ட வடிவிலான வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று (வியாழக்கிழமை) இரவு வரை நடைபெறும்.