கடலூர்: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஐம்பொன் சிலையை கடத்தி, கடலூர் வழியாக புதுச்சேரிக்கு காரில் சிலர் கொண்டு செல்வதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 கார்கள் வேகமாக வந்தது. அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்குள்ள கார் நிறுத்தும் இடத்துக்குள் புகுந்தனர். பின்னர் தங்களுடைய கார்களை நிறுத்தி விட்டு எதுவும் தெரியாதது போல் நின்றனர். இதை நோட்டமிட்ட காவல்துறையினர் அவர்களை நோக்கி சென்றனர். உடன் அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் அவர்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான காவல்துழறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதில் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை சாதாரண உடையில் வந்த காவல்துறையினர் துரத்தி சென்று பிடித்து, அடித்து இழுத்து வந்தனர். இதை அங்கு இருந்த டிரைவர்கள் பொதுமக்கள் என்ன நடக்கிறது? என்று புரியாமல் பதற்றத்துடன் பார்த்தனர். அதன்பிறகே அடித்தது காவல்துறையினர் என்று அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது, ஒரு காரில் சூட்கேஸ் இருந்தது. அதை காவல்துறையினர் திறந்து பார்த்தனர். அதில் 1½ அடி உயரம், 25 கிலோ எடை கொண்ட ஐம்பொன் விநாயகர் சிலை இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட 5 பேரையும் காவல்துறையினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், தனிப்படை காவல் ஆய்வாளர் திரு.கங்காதரன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி அரியாங்குப்பம் நாகராஜ் மகன் ஞானசேகரன் (44), கடலூர் மஞ்சக்குப்பம் வெங்கடேசன் மகன் முகுந்தன்சர்மா (30), நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாராயணசாமி மகன் வினோத் (31), தரங்கம்பாடி செம்மனார்கோவில் சவுந்தர்ராஜன் மகன் செந்தில்வேல் (29), மயிலாடுதுறை மங்கைநல்லூர் அருள் மகன் ராஜா (23) ஆகிய 5 பேர் என்று தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது, மயிலாடுதுறையை சேர்ந்த 3 பேரும் அங்குள்ள பழமைவாய்ந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை கடத்தி, அந்த சிலையை ஞானசேகரன், முகுந்தன் சர்மா ஆகியோரிடம் விற்பனை செய்வதற்காக கடலூர் வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கடலூர் புதுநகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் ஒரு கார் செந்தில்வேலுக்கு சொந்தமானது என்றும், மற்றொரு கார் வினோத்துக்கு சொந்தமானது என்றும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மயிலாடுதுறையில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்கு சிலை கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் வாகன சோதனை செய்தோம். அதன்படி ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி வந்த 5 பேரை கைது செய்துள்ளோம். மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து இந்த ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி வந்துள்ளனர். இது சுமார் 1600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலை ஆகும். அதாவது பல்லவர் காலத்தில் உள்ள சிலையாக இருக்கக்கூடும்.
இந்த சிலையின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இந்த சிலையை புதுச்சேரியில் உள்ள பிரபல சிலை கடத்தல்காரருக்கு கடத்திச்சென்றிருக்கிறார்கள். இருப்பினும் முழுமையாக விசாரித்த பிறகே உண்மை தெரிய வரும். இந்த சிலையை புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக கடத்தினார்களா? என்றும் விசாரித்து வருகிறோம் என்றனர்.
தொடர்ந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து இதுவரை ரூ.150 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை மீட்டு இருக்கிறோம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் இருந்து சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் இன்னும் 160 விலை உயர்ந்த சிலைகளை மீட்க இருக்கிறோம். சிங்கப்பூரில் இருந்து இன்னும் 13 சாமி சிலைகளை மீட்க வேண்டியதிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான 4 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சிலைகள் ஒவ்வொன்றும் தலா ரூ.4 கோடியே 98 லட்சம் மதிப்பு உடையது. வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.1000 கோடி மதிப்புள்ள சாமி சிலையை மீட்டு கொண்டு வர வேண்டியதிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் சிலையை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலுமாக தடுத்து இருக்கிறோம் என்றார்.