கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 11–ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி சட்டம்–ஒழுங்கை பராமரித்திடவும், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்தவும், மருத்துவ உதவிக்காக சிறப்பு முகாம்கள் அமைத்தல், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கூடுதல் பஸ் வசதி
மேலும் போதுமான தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும், போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்கவும், மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.
சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்படி பணிகளை அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக நிறைவேற்றிட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், வருவாய் அலுவலர் விஜயா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷா, சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சண்முகம், சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவி, தீயணைப்பு அலுவலர் திலகர், போக்குவரத்துத்துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கலந்துகொண்டனர்.