கடலூர்: ‘மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்!’ -ஆய்வாளர் அம்பேத்கர் அடிக்கடி இப்படி சொல்வார். பேச்சில் மட்டுமல்ல, நற்செயலிலும் அவர் முனைப்புடன் இறங்குவதால், பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்கிறார்.
யார் இந்த அம்பேத்கர்? அப்படி என்ன செய்துவிட்டார்?
15 நாட்களுக்கு முன்புதான் சிதம்பரத்திலிருந்து வடலூருக்கு காவல்நிலைய ஆய்வாளராக மாறுதலாகிச் சென்றார். சில நாட்களுக்கு முன், வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்குச் சென்ற அவர், இருசக்கர வாகனம் ஓட்டும்போது, தலைக்கவசம் அணிவது அவசியம் என்று அறுவுறுத்தினார். ரூ.500-லிருந்து ரூ.1000 வரை செலவழித்து ஹெல்மெட் வாங்குவது அந்த மக்களுக்கு சிரமமான விஷயம் என்பதை அறிந்து, அங்கு டூ வீலர்கள் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுத்தார்.
தன்னுடைய குடும்ப நண்பரும் விஜய் மோட்டார் ஷோ ரூம் உரிமையாருமான ரவிச்சந்திரனிடமும், டி.வி.எஸ். ஷோ ரூம் உரிமையாளர் ஜெயப்பிரகாஷிடமும், நிலைமையை எடுத்துச்சொல்லி, அத்தனை பேருக்கும் இலவச ஹெல்மெட் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். அவர் இப்படிச் செய்வது முதல்முறை அல்ல. இதற்குமுன், சிதம்பரத்தில் பணியாற்றியபோது, பொது மக்களின் டூ வீலர்களில் பிரேக், ரிவ்யூ மிரர், பம்பர் கம்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மெக்கானிக் மூலம் செக் செய்து, சில வண்டிகளில் இருந்த சிறுசிறு பழுதுகளை நீக்கிக் கொடுத்திருக்கிறார். விபத்துக்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதையெல்லாம் செய்திருக்கிறார். வாகன சோதனைக்குச் செல்லும்போது, இதற்கென்றே மெக்கானிக்கையும் அழைத்துச் சென்று, இதுபோன்ற பணிகளை மேற்கொள்வார்.
‘என்ன நீங்க இப்படி இருக்கீங்க?’ என்று கேட்பவர்களிடம் ஆய்வாளர் அம்பேத்கர் என்ன சொல்கிறார் தெரியுமா? “எளிய மக்களிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். காவல்துறைக்கும் வேலைப்பளுகுறையும்.” என்கிறார்.
பொதுவாக, காவல்துறையினர் மீது எதிர்மறை விமர்சனங்கள் பல இருந்தாலும், அர்ப்பணிப்போடு கடமையைச் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அசத்துங்கள் அம்பேத்கர்!