தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் அனைத்தையும் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து டெங்கு கொசு உருவாவதை தவிர்க்கவும், பொது மக்களிடமும் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அனைத்து காவல் துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் உத்தரவு.
ஏடிஸ் கொசுக்களினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் மழை நேரங்களில் வீட்டிற்கு வெளியே உள்ள பழைய கேன்கள், தொட்டிகள், பழைய டயர்கள் பழைய பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் இருந்து உருவாகிறது.
ஆகவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரும், தங்கள் காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை சுத்தமாக வைத்து இந்த வகை கொசுக்கள் உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது, மேலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் பொதுமக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே போன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும் நல்ல தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு சுத்தம் செய்யப்பட்டது.
அப்போது மாவட்ட பூச்சியியல் வல்லுநர் திரு. ஆனந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. ராமசாமி ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் திரு. காமாட்சி, அருணாச்சலம், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் ஆயுதப்படை ஆய்வாளர் திரு. மகேஷ் பத்மநாபன், உதவி ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.