கடலூர் : மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை (3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பிரதமர் கிசான் உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பயனாளிகள் சேர்க்கப்பட்டு நிவாரணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி என புகார் எழுந்து உள்ள நிலையில், தமிழக காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விஜய மாநகரத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர்.
ஏற்கனவே, ஆட்சியர் திரு.சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில், நடந்த விசாரணையில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரிந்தது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை இந்த திட்டத்தில் சேர்த்த அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரும், பணியில் திறமையில்லாத 10 ஒப்பந்த ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.