மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (18.10.2024)ம் தேதி மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் போட்டோவை அரை நிர்வாணமாக ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் யாரோ பதிவிட்டு அதை நீக்குவதற்கு ரூ.10,000/-பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் யாரென்று கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அவரது பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் மேற்கண்ட குற்றச்செயலை செய்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் MGR நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுரளி மற்றும் சிறார் XXXX என்பதும் தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகளை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி குற்றவாளி பாலமுரளி என்பவரை நீதிமன்ற காவலுக்கும், சிறார் XXXX என்பவரை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் பல கல்லூரி மாணவிகளின் போட்டோக்களை பயன்படுத்தி அதை அரைநிர்வாணமாக ஆபாச போட்டோவாக மார்பிங் செய்து அனுப்பி மிரட்டி பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளி யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் அல்லது இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்