சென்னை : காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் பரிசுகளை வென்றனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் இயங்கி வரும் தமிழக காவல்துறையின் செயலாக்கம் (Operations) பிரிவின் தலைமையில் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டிகள் நடைபெற்றது.
இதில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு பிரிவு மற்றும் நவீன கட்டுப்பாட்டறை ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் முதல் உயரதிகாரிகள் மற்றும் காவல் ஆணையாளர் வரையிலான 536 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பல்வேறு கட்டமாக நடைபெற்ற துப்பாக்கி சுடும்திறன் போட்டியில் 20 காவல் அதிகாரிகள் இறுதிப்போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11.11.2020 நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 அடி, 15 அடி மற்றும் 20 அடி தூரத்தில் சுடும் திறன் போட்டியில் துல்லியமாக இலக்கில் சுட்டு, சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஏ.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் மற்றும் W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எஸ்.லஷ்மி ஆகியோர் முதல் பரிசை பகிர்ந்து கொண்டும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 2ம் பரிசையும், சென்னை பெருநகர காவல், இணை ஆணையாளர் (கிழக்கு மண்டலம்) திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., அவர்கள் 3ம் பரிசையும் வென்றனர்.
இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடுவர், கூடுதல் காவல் இயக்குநர் (செயலாக்கம்) முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில், காவல்துறை கண்காணிப்பாளர் (செயலாக்கம்) திரு.ரமேஷ், திரு.ஜெயச்சந்திரன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்