கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள புகைப்பட பிரிவு மற்றும் அலுவலகம் அருகில் உள்ள மோப்பநாய் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் கடலூர் வந்தார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வரவேற்றார். தொடர்ந்து அவர் புகைப்பட பிரிவுக்கு சென்று, ஆய்வு செய்தார்.
அப்போது, புகைப்பட கலைஞர் மோகன்ராஜிடம், எத்தனை வழக்குகளில் சம்பவ இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளர்கள். நீங்கள் புகைப்படம் எடுத்ததில், எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. முக்கிய வழக்குகளில் உள்ள புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற பல்வேறு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து மோப்ப நாய் பிரிவுக்கு சென்று டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆய்வு நடத்தினார். அப்போது 3 மோப்ப நாய்களையும் நேரில் பார்வையிட்டு, அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். மேலும் எத்தனை வழக்குகளில் மோப்ப நாய்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளது. அதில் முக்கியமான வழக்குகள் என்ன? போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆவணங்களை சரி பார்த்தார்.
இதன்பிறகு கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள சிறுவர் மன்றத்திலும் டி.ஐ.ஜி.சந்தோஷ்குமார் ஆய்வு நடத்தி, மாணவர்கள் வருகை, விளையாட்டு உபகரணங்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் காவ் கண்காணிப்பாளர் வீரராகவன், துணை காவல் கண்காணப்பாளர் சாகுல் ஹமீது, லாமேக், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.