கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் உதவி- ஆய்வாளர் திரு.கண்ணுசாமி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் ஒருவர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது ரோட்டில நடந்து சென்ற ஒருவரை ஒரு வாலிபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதை பார்த்த உதவி- ஆய்வாளர் திரு.கண்ணுசாமி அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். உடனே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து, காட்டி, ‘என்னை நெருங்கி வந்தால் சுட்டுவிடுவேன்‘ என்று உதவி- ஆய்வாளர் திரு.கண்ணுசாமியையும், காவல்துறையினரையும் மிரட்டினார். உடனே அருகில் இருந்த மற்ற காவல்துறையினர் அந்த வாலிபரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் இருந்தன. மேலும் அவரது சட்டை பையில் 4 குண்டுகளை வைத்திருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஆய்வாளர் திரு.ரமேஷ்ராஜ் தீவிர விசாரணை நடத்தினார்.
அதில் அந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமிஞ்சூர் வடபாதி நகரை சேர்ந்த பாடலி என்கிற பாடலீசுவரன்(37) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேட்டு நகரை சேர்ந்த ஆம்புலன்சு குமார்(42) அவரது தம்பி ராஜேஷ்(36) ஆகிய இருவரையும் வீடு புகுந்து வெட்டியும், வெடிகுண்டு வீசியும் கொலை செய்து, அவர்களது தலையை ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி சாலையில் வீசிவிட்டு சென்ற இரட்டைகொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் பாடலி மீது அண்ணாமலை நகர், சிதம்பரம், பேரளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாடலியை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கி, கத்தி மற்றும் 9 தோட்டக்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாடலீசுவரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.