சென்னை : குன்றத்தூர் மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது மாடியில் வசித்து வருபவர் ஆசாத் (42), தொழில் அதிபரான இவர் அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில், சொந்தமாக தோல் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு , குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அறை முழுவதும், சிதறி கிடந்தது. பீரோவில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 100 பவுன் நகையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. ஆசாத், குடும்பத்துடன் பெங்களூரு சென்று இருப்பதை, நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து குன்றத்தூர் காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.