சென்னை : சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச், சேர்ந்த சந்தோஷ்குமார் (19), குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில், பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சந்தோஷ்குமார் கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ்குமார், தனது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சங்கர்நகர்காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராகவன். கார் டிரைவரான இவருக்கு 3 மகன்கள். இவர்களில் 2-வது மகனான அருண்குமார் (19), கிண்டியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அருண்குமார், கடந்த 3 வருடங்களாக செல்போனில் ‘பப்ஜி’ விளையாடி வந்ததாக தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு கூட செல்லாமல் ‘பப்ஜி’ விளையாட்டில் மூழ்கினார். இதனால் விரக்தி அடைந்த அருண்குமார், தனது வீட்டில் தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பீர்க்கன்காரணை காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.