கடலூர்: கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இவருடைய மகன் பழனிவேல் (33) காவலரான இவர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநில பகுதியான முள்ளோடை அருகே வந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றி புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பழனிவேலுக்கு நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பரிசோதனை முடிவில் தான் உறுதியாக கூற முடியும் என்று டாக்டர்கள் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரி வித்தனர்.
இதற்கிடையே பழனிவேல் மூளைச்சாவு அடைந்தால், அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது என்று பெற்றோர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணி அளவில் பழனிவேல் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அவர்களிடம் பழனிவேல் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று அவருடைய உடல் உறுப்புகளான கண், இருதயம், சிறுநீரகம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளை குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். தொடர்ந்து இறந்த பழனிவேலின் உடலை அடக்கம் செய்வதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு அவரது பெற்றோர் உறவினர்கள் கொண்டு வந்தனர்.
இது பற்றி பழனிவேல் தந்தை வெங்கடேசன் கூறுகையில், மூளைச்சாவு அடைந்த என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மண்ணில் புதைந்து வீணாகி போவதற்கு பதிலாக, அவருடைய உடல் உறுப்புகளால் சிலர் உயிர் பெற்றால், அவர்களோடு என் மகன் வாழ்வான் என்றார்.
இறந்த பழனிவேலுக்கு சுஜாதா என்கிற மனைவியும், சிவசுஜித் (3) என்கிற மகனும், சஞ்சனாஸ்ரீ என்கிற 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பழனிவேல் அண்ணன்களில் ஒருவரான பாலமுருகன் பண்ருட்டியில் காவல் உதவி- ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.