குற்றப் பிரிவு (நுண்ணறிவு) Crime Branch (Co-Intelligence)

நுண்ணறிவுப் பிரிவின் கீழ், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, க்யூ பிரிவுக் குற்றப் புலனாய்வுத்துறை, பாதுகாப்புப் பிரிவுக் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புத் தொடர்பான தகவல்களையும், நுண்ணறிவுத் தகவல்களையும் சேகரித்து, ஒப்பாய்வு செய்து, உரியவர்களுக்கு அனுப்பும் பணியை இப்பிரிவு ஆற்றி வருகிறது. கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஒரு காவல்துறைத் தலைவர் மற்றும் இரண்டு காவல்துறைத் துணைத் தலைவர்கள் ஆகியோரது மேற்பார்வையில் இப்பிரிவுகள்  இயங்கி வருகின்றன. காவல்துறைத் துணைத் தலைவர் (1) தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆகியவற்றையும், அண்மையில் உருவாக்கப்பட்ட பதவியான காவல்துறைத் துணைத் தலைவர் (2) க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

1)தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை :
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆணையரகத்திலும், ஆய்வாளர் ஒருவரது தலைமையில், இத்துறையின் ஒரு பிரிவு இயங்கி வருகிறது. மாநில அளவில் தனிப்பிரிவுக் குற்றப் புலனாய்வுத் துறையானது, மாநிலத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள், சாதிச் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படும் பதற்ற நிலை மற்றும் பிற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த நுண்ணறிவுத் தகவல்களைச் சேகரித்து, ஒப்பாய்வுச் செய்து, உரியவர்களுக்கு அனுப்பும் பணியை ஆற்றி வருகிறது. தனிப்பிரிவு அளிக்கும் நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையானது உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக, பெரிய அளவில் சாதி மோதல் எதுவும் நிகழவில்லை.

2)க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை :
குற்றப் புலனாய்வுத்துறையில் தனி அலகு ஒன்று 1971ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ,வ்வுலகின் பெயர் க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை என மாற்றப்பட்டு, தற்போது நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை இப்பிரிவு கவனித்து வருகிறது. தீவிரவாதிகள், போராளிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்த நுண்ணறிவுத் தகவல்களை இப்பிரிவு சேகரிக்கிறது. இப்பிரிவின் அலகுகள் காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றிற்கு தீவிரவாதிகள், போராளிகள் மற்றும் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் புலன்விசாரணை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3)பாதுகாப்புப் பிரிவுக் குற்றப் புலனாய்வுத்துறை :
முக்கியப் பிரமுகர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அயல்நாட்டுத் தலைவர்கள் ஆகியோரது பாதுகாப்புப் பிரிவுக் குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாட்டவரின் நடவடிக்கைகள், முக்கியக் கேந்திர அமைப்புகள் மற்றும் கடவுச்சீட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பணியை இப்பிரிவு மேற்கொண்டு வருகிறது. மிக முக்கிய நபர்கள் பாதுகாப்புப் பிரிவில் மெய்க்காவல் குழு, வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் படை, மோட்டார் வாகனப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு, மோப்பநாய்ப்படை மற்றும் பெண்கள் அணி ஆகிய பிரிவுகள் பாதுகாப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையில் அடங்கியுள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், கூட்டங்கள் மற்றும் மாவட்டச் சுற்றுப் பயணங்கள் ஆகியவற்றின்போது உச்சக்கட்டப் பாதுகாப்பினை இப்பிரிவு வழங்கி வருகிறது. 2007ம் ஆண்டில், அதி முக்கிய நபர்கள், முக்கிய நபர்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய நபர்கள் ஆகியோர் வருகையின்போது, 416 நிகழ்வுகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாக்கப்பட வேண்டிய நபர்கள் மற்றும் முக்கிய நபர்கள் ஆகியோருக்கு 138 நிகழ்வுகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist