தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 05.10.2020 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஆறுமுகநேரி கணியாளர் தெருவைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் பால் லிங்கம்(26) என்பவரை ஆறுமுகநேரி கோவில் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் லிங்கராஜா (33) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் லிங்கராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான லிங்கராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்களும்,
கடந்த 05.09.2020 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் குரும்பூர் இராஜபதியை சேர்ந்த ரூபன் மகன் முத்துக்குமார்(29) என்பவர் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முத்துக்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி அவர்களும்,
கடந்த 09.10.2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலாயுதபுரம் இரயில்வே மேம்பாலத்திற்கு கீழ்பகுதியல் மதுரை மாவட்டம் திருமங்கலம் நடுக்கோட்டையைச் சேர்ந்த காமாட்சி மகன் மகேந்திரன் (23) என்பவர் வந்துகொண்டிருக்கும் போது கோவில்பட்டி இராஜீவ் நகரைச் சேர்ந்த டேவிட் மகன் இம்மானுவேல் ராஜா (43) மற்றும் அவரது நண்பரான கோவில்பட்டி வீரபாண்டிநகரைச் சேரந்த கொம்பையா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இம்மானுவேல் ராஜாவை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான இம்மானுவேல் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராணி அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 3 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகளான 1) ஆறுமுகநேரி கோவில் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் லிங்கராஜா 2) குரும்பூர் இராஜபதியை சேர்ந்த ரூபன் மகன் முத்துக்குமார் 3) கோவில்பட்டி இராஜீவ் நகரைச் சேர்ந்த டேவிட் மகன் இம்மானுவேல் ராஜா ஆகிய மூன்று எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 3 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி